விவசாயிகள் தற்கொலை செய்துக் கொள்வது, இந்தியாவின் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றாக இருந்து வருகிறது.
இதனை தடுப்பதற்கு அரசு சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், விவசாயிகளின் தற்கொலை குறையாமல் தான் உள்ளது. இந்நிலையில், இன்னொரு விவசாயி, பாலங்கீர் பகுதியில், தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.
அதாவது, ஒடிசா மாநிலம் பாலங்கீர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் பாய். 50 வயதான இவர், அப்பகுதியில், விவசாயம் செய்து வந்தார்.
இந்நிலையில், இவர் தனது விவசாய நிலத்தில் விளைத்திருந்த பயிர்கள், பூச்சித் தொல்லையால், நாசமாகியுள்ளது. இதனை அறிந்த அவர், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
இதையடுத்து, தனது சொந்த விளை நிலத்திலேயே, விஷம் அருந்திய அவர், அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். ரமேஷ் பாய் மயங்கி கிடப்பதை அறிந்த உறவினர்கள், அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
ஆனால், சிகிச்சை பலன் இன்றி, இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த ரமேஷ் பாய், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.