நாட்டு நலனுக்காக விவசாயிகள் போராட்டம் நடத்துவது, போர் வீரர்களின் தியாகத்துக்கு இணையானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று பாரத் நியாய யாத்திரை மேற்கொண்டார். அப்போது பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
பஞ்சாப் – ஹரியாணா எல்லையில் தற்போது போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், எல்லையில் போர் வீரர்களைப்போல நாட்டுக்காக போராடுகின்றனர். நாட்டு நலனுக்காக விவசாயிகள் போராட்டம் நடத்துவது, போர் வீரர்களின் தியாகத்துக்கு இணையானது.
ஆர்எஸ்எஸ் அமைப்பும் பாஜகவும் மணிப்பூர் மாநிலத்தை பற்றி எரியச் செய்த இனக் கலவரத்தை ஏற்படுத்தின. பெரும் பணக்காரர்களின் ரூ.14 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்த மோடி தலைமையிலான அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்திரவாத திட்டத்தின் செலவை ரூ.70,000 கோடி குறைத்துள்ளது.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு அழைக்கப்பட்ட விருந்தினர்களில் ஏழை மக்கள் இடம் பெறவில்லை. பிரபலங்கள் அதிகளவில் கலந்து கொண்டனர். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.