வடசென்னை அனல் மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம், உயர் மின் கோபுரங்கள் வழியாக, 400 கிலோ வாட் திறனுடைய மணலி மின் பகிர்மான நிலையத்திற்கு எடுத்து வரப்படுகிறது.
இந்த நிலையில் மணலி எம்.எஃப்.எல் கூட்டு சாலை அருகில் உள்ள துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள இயந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவால் மின்சாரம் செல்லக்கூடிய உயர் அழுத்த மின் கோபுர வழித்தடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் வடசென்னையில் உள்ள திருவொற்றியூர், ராயபுரம், மணலி, பெரம்பூர், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மத்திய சென்னையில் உள்ள அமைந்தகரை, கோடம்பாக்கம், எழும்பூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, அண்ணாசாலை, தேனாம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், புறநகர் பகுதிகளாக உள்ள பூந்தமல்லி, போரூர், மதுரவாயில், அம்பத்தூர், முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் விபத்து ஏற்பட்ட பகுதிக்கு உடனடியாக சென்ற மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பு வழங்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.
இதனால் மின்தடை ஏற்பட்ட 30 நிமிடத்தில் சென்னை திருவல்லிக்கேணி சேப்பாக்கம் வடபழனி சாலிகிராமம் கோடம்பாக்கம் அண்ணா சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் உடனடியாக மின்சாரம் வழங்கப்பட்டது.