நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றி வெற்றிபெற்றது. இதையடுத்து, நாட்டின் பிரதமராக மோடி நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
மோடி தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக பதவியேற்ற விழாவை நாட்டின் பல்வேறு பகுதிகளில் பா.ஜ.க.வினர் உற்சாகமாக கொண்டாடினர்.
இந்நிலையில் மத்தியபிரதேசம் இந்தூர் பாஜக அலுவலகத்தில் அக்கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது சில பட்டாசுகள் வெடித்து சிதறியதில் பாஜக அலுவலகத்தில் தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து பா.ஜ.க. அலுவலகத்தில் இருந்து அனைவரும் தப்பியோடினர். இச்சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.