ராகுல் காந்தியின் புதிய ஹேர் ஸ்டைல்.. ஆசைப்படும் இளைஞர்கள்.. ஆச்சரியத்தில் சலூன் கடைக்காரர்..

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி நாடாளுமன்ற தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி போட்டியிட உள்ளார். இந்த தொகுதியின் தேர்தல், வரும் 20-ஆம் தேதி அன்று நடக்க உள்ளது.

இதற்கான பரப்புரைக்காக, கடந்த மே 13-ஆம் தேதி அன்று, லால்கஞ்ச் பகுதியில் இருந்த முடி திருத்தம் செய்யும் கடைக்கு, ராகுல் காந்தி சென்றிருந்தார். அங்கு, தனது முடி மற்றும் தாடியை திருத்தம் செய்துக் கொண்டார்.

மேலும், ஃபயர் ஹேர் கட் குறித்து இருவரும் நகைச்சுவையாக பேசிக் கொண்டனர். தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் மகாலட்சுமி திட்டம் குறித்து பேசிய ராகுல் காந்தி, அந்த திட்டத்தின் மூலம், வறுமையில் உள்ள குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு, வருடந்தோறும் ரூபாய் 1 லட்சம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று கூறினார்.

இதையடுத்து, அவர் அங்கிருந்து கிளம்பி சென்றார். இந்த சம்பவத்திற்கு பிறகு, அங்குள்ள பல இளைஞர்கள், ராகுல் காந்தி முடித்திருத்தம் செய்த கடையின் முன்பு குவிகிறார்களாம்.

இதுகுறித்து பேசிய சலூன் கடையின் உரிமையாளர் மிதுன் குமார், “ரேபரேலி தொகுதி இளைஞர்கள் மத்தியில், ராகுல் காந்தியின் புதிய ஹேர் ஸ்டைல் புதிய ட்ரெண்டை உருவாக்கியுள்ளது. எனக்கு ஆச்சரியமாக உள்ளது. ஒவ்வொரு நொடியும் என்னை அணுகும் இளைஞர்கள், ராகுல் காந்தி மாதிரி ஹேர் ஸ்டைல் வேண்டும் என்று சொல்கிறார்கள்” என கூறியுள்ளார்.

“ராகுல் காந்தியின் வருகை என்னுடையை வாழ்க்கையை மாற்றும் என்று நான் நிச்சயம் நினைக்கவில்லை. முன்பு, ரெகுலர் கஸ்டமர்கள் மட்டும் தான் என்னுடைய கடைக்கு வந்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், ராகுல் ஜி-யின் வருகைக்கு பிறகு, இங்கே வாடிக்கையாளர்களின் பெரிய வரிசையே உள்ளது. ஆரம்பத்தில், ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் தான், இப்படியான நீண்ட வரிசையை பார்க்க முடியும். ஆனால், இப்போது எனக்கு எல்லா நாட்களும், ஞாயிற்றுக் கிழமை தான்” என்று கூறியுள்ளார்.

“ இளைஞர்கள் மட்டுமல்லாது, பல்வேறு தரப்பினர் ராகுல் காந்தியின் தாடி ஸ்டைல் வேண்டும் என்று என்னிடம் கேட்கிறார்கள்” என்று கூறினார்.

“பொதுமக்கள் மத்தியில், பாலிவுட் திரையுலகம் எப்படி ஹேர் ஸ்டைல் டிரெண்டை ஏற்படுத்துகிறது என்று, சில பேரிடமும், எனக்கு தொழில் கற்றுக் கொடுத்த என்னுடைய குருவிடமும், ஆரம்பத்தில் நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.

ஆனால், ஒரு அரசியல்வாதியின் ஹேர் ஸ்டைல் பொதுமக்கள் மத்தியில் கவரப்பட்டது, இதுவே முதல் முறை” என்று அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மிதுன் குமார், சில சமயங்களில், கடைக்கு வரும் இளைஞர்களால் எரிச்சல் அடைந்த சம்பவங்களும் ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளார். அதாவது, ராகுல் காந்தி வைத்துக் கொண்ட ஹேர் ஸ்டைல், தாடியின் ஸ்டைல் வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கேட்டால் பரவாயில்லை.

ஆனால், அவர் அமர்ந்த அது நாற்காலியில் தான் நானும் அமர்ந்து முடி வெட்டிக் கொள்வேன் என்று சிலர் கூறுவார்கள். அவ்வாறு கூறுவது, எரிச்சல் அடைய வைக்கும் என்று, மிதுன் குமார் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News