தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ. 6,362 கோடி: ரயில்வே அமைச்சர் தகவல்!

நடப்பு 2024-25-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்காக ரூ.6,362 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்து, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில் நேற்று (ஜூலை 25) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நடப்பு 2024-25-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்காக ரூ.6,362 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2023-24- ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட ரூ.6,080 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகமாகும்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் ஆண்டு சராசரியாக தமிழகத்துக்கு ரயில்வே திட்டங்களுக்காக ரூ.879 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் ஒதுக்கப்பட்டு வந்த நிதியைவிட ஏழு மடங்கு அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் ரூ.33,467 கோடி மதிப்பீட்டில் 22 ரயில்வே திட்டப் பணிகள் (புதிய ரயில் பாதைகள்) மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அம்ரித் ரயில் நிலையங்களாக 77 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் 687 ரயில்வே மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள் கட்டப்பட்டுள்ளன.

ரயில்வே திட்டப் பணிகளின் முன்னேற்றமானது நிலம் கிடைப்பதைச் சார்ந்திருக்கிறது. நிலம் கையகப்படுத்தும் பணிகளை விரைவாக மேற்கொள்ளும் வகையில், மாநில அரசுகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம். திட்டங்களைச் செயல்படுத்துவதில் நிதிப் பற்றாக்குறை ஏதும் இல்லை. நிலம் கிடைக்கும்பட்சத்தில் திட்டப் பணிகளை வேகப்படுத்த முடியும் என்றார் அமைச்சர்.

RELATED ARTICLES

Recent News