மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க விரும்பும் தொண்டு நிறுவனங்களுக்கு வாப்ஸ் அப் எண்ணை தமிழக அரசு அறிவித்துள்ளது.
“மிக்ஜாம்” புயலால் முன் எப்போதும் இல்லாத வகையில் இடைவிடாது பெய்த அதிகன மழையின் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து பாதிப்புகுள்ளானது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பொதுமக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்டை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.
மழை வெள்ளத்தால் பாதிப்பிற்குள்ளான குடும்பங்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட பல்வேறு நிவாரணப் பொருட்கள் வழங்க பல்வேறு தொண்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இவ்வாறு தொண்டு நிறுவனங்கள் மூலம் வரப்பெறும் நிவாரணப் பொருட்களை தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்பி வைப்பதற்கான உரிய ஏற்பாடுகளை செய்ய இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, ‘மிக்ஜாம்’ புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க விரும்பும் தொண்டு நிறுவனங்கள் 7397766651 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.