ஒடிசா மாநிலத்தில் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதாதளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலும் நடத்தப்பட்டது. இதில் பதிவான வாக்குகள் நாளை வெளியாக உள்ளது.
மதுரை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.கே. பாண்டியன் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுவிட்டு பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார். அவர் பிஜு ஜனதா தளம் கட்சியின் முக்கிய தலைவராக உருவெடுத்து வருகிறார்.
சமீபத்தில் தேர்தல் பிரசார விளம்பரம் ஒன்றை பா.ஜ.க. வெளியிட்டது. அதில் ஒரு நபரை வி.கே. பாண்டியன் போல சித்தரித்து வாழை இலையில் உணவு அருந்துவதுபோலவும் அதை மற்றவர்கள் கேலி செய்வது போலவும் வீடியோ வெளியிட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், பா.ஜ.க. வெளியிட்டுள்ள இந்த விளம்பரம் வீடியோவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கட்டணம் தெரிவித்துள்ளார். “ஒரு தமிழன் ஒடிசாவில் முதன்மையான இடத்திற்கு சென்று விடக் கூடாது என்று எத்தனையோ இழிசொற்களை பாஜக ஏவியது!
கடந்த ஆண்டு இதே நாளில் இதே வி.கே.பாண்டியன் தான் ஒடிசா ரயில் விபத்தின் போது படுகாயமடைந்து இருந்த தமிழர்களுக்கு தேவையான இரத்தமும் உரிய சிகிச்சையும் உடனடியாக கிடைப்பதற்கு உறுதுணையாக நின்றவர்.
ஒரு மனிதனை இனத்தாலும் மொழியாலும் மதத்தாலும் பிரித்து, பிரிவினைவாதம் என்ற விழியின் வழியாக தான் பாஜக பார்க்கிறது. மதுரை மண்ணின் இந்த மறத்தமிழன் அறத்தின் வழி நின்று வென்று காட்டுவார்! வி.கே. பாண்டியன் என அவர் பதிவிட்டுள்ளார்.