சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் திலகர் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (54). இவர் அதிமுகவின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இவர் இன்று அதிகாலை தனது வீட்டின் அருகே உள்ள மைதானத்தில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு 3 இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் பார்த்திபனை வழி மறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றது. இதையடுத்து பார்த்திபனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த செங்குன்றம் காவல் துறையினர் பார்த்திபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.