“அதிகாரிகளுக்கு ஆதரவு தருவேன்” – உதவியாளர் கைது குறித்து எம்.பி.சசி தரூர்!

காங்கிரஸ் எம்.பி.சசி தரூரின் முன்னாள் உதவியாளர் ஷிவ் குமார், துபாயில் இருந்து டெல்லிக்கு, கடந்த புதன்கிழைமை வந்துள்ளார். அங்கிருந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரை பரிசோதனை செய்துள்ளனர்.

அப்போது, அவரிடம் 500 கிராம் அளவு கொண்ட தங்கம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஷிவ் குமாரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர் மட்டுமின்றி, உடன் பயணித்த இன்னொரு பயணியும், தங்கம் கடத்தியதற்காக, கைது செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவத்தை அறிந்த மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், தனது எக்ஸ் பக்கத்தில் கடும் கண்டனங்களை கூறியிருந்தார்.

அந்த பதிவில், “முதலில், முதலமைச்சரின் செயலாளர் தங்க கடத்தலில் ஈடுபட்டிருந்தார். தற்போது காங்கிரஸ் எம்.பியின் உதவியாளர் தங்க கடத்தலில் ஈடுபட்டதற்காக, கைது செய்யப்பட்டிருக்கிறார்.

CPM மற்றும் காங்கிரஸ் கட்சி இரண்டும், இண்டியா கூட்டணியில் உள்ளது. இது ஒரு தங்க கடத்தல் கூட்டணி” என்று விமர்சித்திருந்தார்.

இவ்வாறு, பாஜவினர் இந்த சம்பவம் தொடர்பாக தங்களது விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், எம்.பி.சசி தரூர் இதுதொடர்பாக பதிவு ஒன்றை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், “தர்மசாலா பகுதியில், பிரச்சாரப் பணிகளில் நான் இருந்தபோது, என்னுடைய முன்னாள் பணியாளர், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தொடர்பாக வந்த செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்” என்று கூறினார்.

மேலும், 72 வயதான ஷிவ் குமார், கருணையின் அடிப்படையில் தான் தன்னிடம் வேலை பார்த்து வந்தார் என்றும், அவர் கூறினார். தொடர்ந்து, “சட்டத்திற்கு புறம்பான விஷயங்களை நான் மன்னிக்க மாட்டேன். தேவையான நடவடிக்கைகைள் எடுப்பதற்கு, நான் அதிகாரிகளுக்கு ஆதரவு தருவேன்” என்றும் அவர் கூறினார்.

RELATED ARTICLES

Recent News