“ரொம்ப பேசுற.. உன்ன கொன்னுடுவேன்” – முன்னாள் பாஜக எம்.எல்.ஏ-க்கு கொலை மிரட்டல்!

ஷாஹீத் பாகத் சிங் சேவா டால் மற்றும் ஷாஹீத்-ஏ-அசாம் பாகத் சிங் என்ற அறக்கட்டளையின் நிறுவனர் ஜிதேந்திர சிங் ஷன்டி. கடந்த 2008-ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த இவர், 2013-ஆம் ஆண்டு நடந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

இதுமட்டுமின்றி, கொரோனா காலகட்டத்தில் அவர் செய்த சேவையின் காரணமாக, அவருக்கு 2021-ஆம் ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

இவரது மகன் சர்தார் ஜோதி ஜீத், டெல்லி பாஜகவின் செய்தி தொடர்பாளராக பதவி வகித்து வருகிறார். இவர், காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக, சமீபத்தில் நடந்த நேர்காணலில் பேசியிருந்தார்.

இதுமட்டுமின்றி, டெல்லியின் கன்னாட் பகுதியில், காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிரான வாசகங்களை கொண்ட பதாகைகளை தனது கையில் ஏந்தியிருந்தார். இந்த வீடியோ, உலகம் முழுவதும் பரவி, வைரலாகியிருந்தது.

இந்நிலையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜிதேந்தர் சிங் ஷெண்டி, டெல்லி காவல்துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், என்னையும், என் மகனையும் கொன்றுவிடுவேன் என்று வாட்ஸ்-அப் காலில் மிரட்டியதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், “நேற்று இரவு 12.59 மணிக்கு, காலிஸ்தான் ஆதரவாளர் ஒருவர் வாட்ஸ்-அப்பில் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

பாஞ்சாபி மொழியில் பேசிய அந்த நபர், காலிஸ்தானுக்கு எதிராக, நானும், என் மகனும் தொடர்ச்சியாக பேசுகிறோம் என்றும், உங்களது கடைசி நாள் வந்துவிட்டது என்றும், மிரட்டியிருந்தார்.

35-ல் இருந்து 40 நொடிகள் என்னிடம் பேசிய அந்த நபர், அதன்பிறகு, செல்போன் அழைப்பை துண்டித்துவிட்டார்” என்று கூறியிருந்தார். பாஜகவின் முன்னாள் எம்.எல்.ஏ-க்கு, காலிஸ்தான் ஆதரவாளர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News