டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.
இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி என்பதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
இந்நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸில் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் பேசியதாவது: எந்த ஒரு அணிக்கும் விராட் கோலி மிகவும் ஆபத்தான வீரரே. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி அவரது ஆக்ரோஷமான ஆட்டத்தை சிறிது குறைத்துக் கொள்ள வேண்டியிருக்கும். அயர்லாந்துக்கு எதிரான முதல் போட்டியில் பெரிய ஷாட்டுக்கு முயற்சி செய்து ஒரு ரன்னில் அவர் அவுட் ஆனார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் விராட் கோலி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பல விதமான ஷாட்டுகளை விளையாடினார்.
விராட் கோலியால் அனைத்து விதமான ஷாட்டுகளையும் விளையாட முடியும். ஆனால், அவருடைய ஸ்டிரைக் ரேட்டை சிறிது குறைத்துக் கொள்ள வேண்டும். அவர் 130 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடினால் போதுமானது. 140-150 ஸ்டிரைக் ரேட்டில் விளையாட வேண்டும் என்பதில்லை. அணியில் அவருக்கான பொறுப்பு என்னவென்றால், 15 அல்லது 20 ஓவர் வரை விளையாட வேண்டும். 60 -70 ரன்கள் குவிக்க வேண்டும். விராட் கோலி 70 ரன்கள் குவித்தால் அது சிறப்பான ஆட்டமாக இருக்கும் என்றார்.