உங்கள் மீது யாரேனும் கற்களை வீசினால் அதனை கொண்டு கட்டடங்கள் எழுப்புங்கள் என்று இளைஞர்களை நல் வழிப்படுத்தி வந்தவர் ரத்தன் டாடா.
இவர் முதுமை தொடர்பான பாதிப்புகளுக்கு மும்பையில் உள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு காலமானார். இவர் மறைவு தேசத்தையே கலங்க செய்துள்ளது.
அவரது மறைவு செய்தியை அறிந்து தொழில் துறையினர் மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களும் வருத்தம் அடைந்துள்ளனர். தொழிலதிபரான அவர் இந்தியர்களின் இதயங்களை வென்றது எப்படி என பார்ப்போம்.
உப்பு விற்பனை, கைக்கடிகாரம், இரும்பு, மோட்டார் வாகனத் துறை, விமான நிறுவனம், மென்பொருள் நிறுவனம் என பல்வேறு தொழில்களில் கோலோச்சி வரும் டாடா குழுமத்தை நிறுவிய ஜாம்ஷெட்ஜி டாடாவின் கொள்ளுப் பேரன் தான் ரத்தன் டாடா. மும்பையில் 1937-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதியன்று நாவல் டாடா, சுனு தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.
இவர் 1962-ல் அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டமைப்புப் பொறியியலில் பி.எஸ்சி. பட்டம், 1975-ல் ஹார்வர்டு வணிகக் கல்லூரியில் உயர் மேலாண்மைப் பட்டம் பெற்றார்.
படிப்பை முடித்தவுடன் இன்றளவும் மிகப்பெரிய நிறுவனமாக இருக்கும் ஐபிஎம்மில் பணிக்கு சேர்ந்தவர். எனினும் தாய் நாட்டின் மீதுள்ள பற்றின் காரணமாக இந்தியாவுக்கே திரும்பினார்.
1962 ஆம் ஆண்டு டாடா நிறுவனத்தில் உதவியாளராகச் சேர்ந்தார். 1971-ல் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த தி நேஷனல் ரேடியோ அண்ட் எலக்ட்ரானிக்ஸ் கம்பெனி நிறுவனத்தின் (Nelco) பொறுப்பு இயக்குநராக பொறுப்பேற்றார். இவரது ஆலோசனைகளால் நெல்கோ மீண்டது. 1991-ம் ஆண்டு ஜே.ஆர்.டி.டாடாவிடம் இருந்து டாடா குழுமத் தலைவர் பொறுப்பை ஏற்றார். தனது தலைமைக்கு பிறகு பல புதிய திட்டங்களைப் புகுத்தி நிறுவனத்தின் வருமானத்தை 10 மடங்கு உயர்த்தினார்.
டெட்லி டீ, கோரஸ், ஜாகுவார் லேண்ட் ரோவர் உள்ளிட்ட முக்கிய வெளிநாட்டு நிறுவனங்களை டாடா குழுமம் கையகப்படுத்தியது. இதன்மூலம், ஒட்டுமொத்த உலகையே இந்தியாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார் ரத்தன் டாடா.
கார் வாங்குவது என்பது செல்வந்தவர்களுக்கு மட்டுமே சாத்தியமாக இருந்த நிலையில், 2008-ஆம் ஆண்டு டாடா நானோ என்ற சிறிய காரை ஒரு லட்சத்துக்கு அறிமுகப்படுத்தி சாமானியனின் கனவை நனவாக்கினார் ரத்தன் டாடா.
பல நாடுகளில் தொழில் நிறுவனத்தை நடத்த இவர், இதுவரை ஒருமுறைகூட உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெற்றதில்லை. அதன் காரணம், டாடா குழுமத்தின் 66 சதவீத லாபத்தை டாடா அறக்கட்டளை மூலம், கல்வி, மருத்துவம், வாழ்வாதார முன்னேற்றம், கலை, கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு சமூக பணிகளை மேற்கொண்டதே காரணம். மேலும், கொரோனா நிவராண நிதியாக 1,500 கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.
50 ஆண்கள் டாடா குழுமத்தின் தலைவராக இருந்தபின்னர், அவர் அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் டாடா சன்ஸ் இன் கௌரவத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
தொழில் துறை மூலம் தேசத்தின் வளர்ச்சிக்காக ஆற்றிய பணிக்காக இந்தியாவின் உயரிய விருதுகளான பத்ம பூஷணை 2000-ஆம் ஆண்டும், பத்ம விபூஷன் விருதை 2008-ஆம் ஆண்டு வழங்கி மத்திய அரசு கௌரவித்தது.