உடனடியாக கேங்மேன் பணி நியமனஆணைகளை வழங்க வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்!

முதல்வர் ஸ்டாலின் கேங்மேன் பணி நியமனஆணைகளை வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தல்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கேங்மேன் பணி வழங்கக் கோரி அரசின் கவனத்தை ஈர்க்கப் போராட்டிய தமிழக இளைஞர்கள் மேல் பதிந்த வழக்குகளை திரும்பப் பெறவும், அவர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கிடவும் திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, 2017-ஆம் ஆண்டு எனது தலைமையிலான அரசு பதவியேற்ற நாளில் இருந்து, ஜெயலலிதா ஆட்சியின் இறுதிநாள் வரை ஆர்ப்பாட்டம், போராட்டம் என பல்லாயிரக்கணக்கான போராட்டங்கள் நடைபெற்றன. இப்போதுள்ள அதே காவல்துறைதான் எங்களது ஆட்சியிலும் இருந்தது. ஆனால், ஜெயலலிதாவின் அரசு அனைத்துப் போராட்டங்களையும் சட்டப்படி கையாண்டது. யார் மீதும் பழிவாங்கும் நோக்கத்தில், குறிப்பாக போராடிய இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கும் வகையில் எந்தவிதமான நடவடிக்கையிலும் எனது தலைமையிலான அரசு ஈடுபடவில்லை.

திமுக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முதல்வரின் தொகுதியிலேயே, கேங்மேன் பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட சுமார் 800 விடுபட்ட கேங்மேன்கள் போராட்டம் நடத்திவிட்டார்கள் என்ற எண்ணத்தில், அவர்களுக்கு சம்மன் வழங்க முயற்சிக்கும் திமுக அரசின் காவல்துறை, அம்முயற்சியை கைவிட வேண்டும் என்றும், தங்களது எதிர்காலத்திற்காகப் போராடும் இளைஞர்களுடைய வாழ்வினை பலியாக்கும் எந்தவித முயற்சியிலும் ஈடுபட வேண்டாம் என்று காவல் துறையை வலியுறுத்துகிறேன்.

மேலும், கேங்மேன் பணிகளுக்குத் தேர்வான 5,237 இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு, அவர்களுக்கு உடனடியாக கேங்மேன் பணி நியமனஆணைகளை வழங்க, திமுக அரசின் முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

Recent News