சென்னை போரூர் பகுதியில் அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு, உயிருக்கு ஆபத்தான நிலையில், மூதாட்டி ஒருவர் சிகிச்சைக்காக வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அவருக்கு சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவர் இல்லாததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், காலை 7 மணி முதல், மருத்துவர் வராததால், நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகியதாகவும் கூறப்படுகிறது. இதனால், மருத்துவமனை ஊழியர்களிடம், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, மருத்துவமனையில் இருந்த நடிகர் கஞ்சா கருப்பும், மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதற்கிடையே, நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் இருந்து, வேறொரு மருத்துவமனைக்கு அந்த மூதாட்டியை பொதுமக்கள் அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து பேசியுள்ள கஞ்சா கருப்பு, “காலை 8 மணிக்கு வரவேண்டிய மருத்துவர், தன்னுடைய சொந்த கிளினீக்குகளில் வேலைகளை முடித்துவிட்டு, மதியம் 3 மணிக்கு தான் வருவார் என்று, மருத்துவமனை ஊழியர்கள் கூறினார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “எமர்ஜென்சி பிரிவிலும் கூட, மருத்துவர்கள் இல்லை” என்று, நடிகர் கஞ்சா கருப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள துணை மேயர் மகேஷ் குமார், “விடுமுறை தினம் என்பதால், ஷிப்ட் சுழற்சி முறையால், இந்த பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம். உங்களது புகாரை ஏற்றுக் கொள்கிறோம். இந்த புகார்கள் அனைத்தும் சரி செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.