ஒரு கிரிக்கெட் அணி சிறந்த அணியாக இருப்பதற்கு, ஒரு சிறந்த பயிற்சியாளர் தேவை என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, ராகுல் ட்ராவிட் இருந்து வருகிறார்.
இவரது பதவிக்காலம் முடிய இருப்பதால், அந்த பதவிக்கு பல்வேறு முன்னாள் வீரர்களின் பெயர் அடிப்பட்டு வருகிறது. குறிப்பாக, எம்.எஸ்.தோனி, ஸ்டீபன் ஃலெமிங் ஆகியோரின் பெயர், சமீபத்தில் அந்த பட்டியலில் இருந்தது.
மேலும், கிரிக்கெட் தலைமை பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களை, பி.சி.சி.ஐ தற்போது பெற்று வருகிறது. இந்த விண்ணப்பங்கள் அனுப்புவதற்கான கடைசி நாள் மே 27-ஆம் தேதி என்றும் அது அறிவித்திருக்கிறது.
இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர், அந்த பதவியின் மீதான தனது ஆர்வத்தை தற்போது வெளிப்படுத்தியுள்ளார். அதாவது, இந்தியாவின் பல்வேறு முக்கியமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக இருப்பவர் கௌதம் கம்பீர். இவர் தற்போது கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.
இந்த அணிக்கும், சன் ரைசர்ஸ் அணிக்கும், நாளை இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு அணியை தயார் செய்யும் பணிகளில் அவர் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார். எனவே, ஐ.பி.எல் போட்டி முடிந்த பிறகு, பி.சி.சி.ஐ-யின் செயலாளர் ஜே ஷா மற்றும் தலைவர் ரோகர் பின்னி-யை, அவர் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பு சுமூகமான முறையில் முடிந்தால், கவுதம் கம்பீர், தலைமை பயிற்சியாளராக மாற அதிக வாய்ப்பு உள்ளது. அவ்வாறு தலைமை பயிற்சியாளர் வாய்ப்பை அவர் பெற்றால், ஒரே வருடத்தில் KKR பயிற்சியாளர் பதவியில் இருந்து நிச்சயம் விலக வேண்டும் என்பது நிதர்சனம்..