ஒரு சில திரைப்படங்கள் மட்டும் தான், நாம் 100 முறைக்கு மேல் பார்த்தாலும் கூட சலிப்பு தட்டாது. அப்படியான திரைப்படங்கள், ஒரு சில மட்டுமே நடிகர்களின் வாழ்க்கையில் கிடைக்கும். அதில், விஜய்க்கு முதன்முதலில் கிடைத்த படம் என்றால், அது கில்லி தான்… இப்படம் வெளியாகி, 19 ஆண்டுகள் ஆன நிலையில், அந்த படம் தொடர்பான சுவாரசிய தகவல்கள் பலவற்றை தற்போது காண்போம்…..
பகவதி, வசீகரா, புதிய கீதை, உதயா என்று தொடர் தோல்விகளை விஜய் சந்தித்து வந்தார். அதன் பிறகு அவரது நிலைமை என்ன என்று எதிரிகள் ஏளனமாக பார்த்துக் கொண்டிருந்தனர். மிகவும் துவண்டுக் கிடந்தது விஜயின் மார்கெட்.. அந்த சமயத்தில் வெளியான திரைப்படம் தான் கில்லி.. எள்ளி நகையாடிக் கொண்டிருந்த எதிரிகள், புருவத்தை உயர்த்தி பார்க்க வைத்தது கில்லி..
ஒரு கமர்ஷியல் திரைப்படத்திற்கு உண்டான, Mass Movement-கள் எந்த இடத்தில் வைக்க வேண்டும்? எவ்வளவு நிமிடம் வைக்க வேண்டும்? எந்த அளவில் இருக்க வேண்டும்? என்று இன்றைய இளம் இயக்குநர்களுக்கு பாடம் எடுக்கும் அளவிற்கு, சரியான அளவில் அமைந்திருக்கும். இண்டர்வெல் காட்சி முடிந்த பிறகு, விஜயை 100 பேருக்கு மேல் சுத்துப்போட்டு வெட்ட வரும்போது, அவர்களை விஜய் எப்படி கையாள்கிறார் என்ற ஒரே காட்சியே போதும், கில்லியின் தரத்தை சொல்வதற்கு.
இவ்வாறு மாஸ் காட்சிகள் ஒரு புறம் என்றால், காதல் காட்சிகள் இன்னொரு ரகம்.. திருடுப்போன Hand Bag-ஐ கண்டுபிடித்துக் கொடுத்தால் காதல் வந்துவிடும் என்ற அளவில் தான், அன்றைய காலத்தில் காதல் காட்சிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. ஆனால், கில்லியில் அதிலும் வித்தியாசம் காட்டியிருப்பார்கள்.
வேலுவுக்கும், தனலட்சுமிக்கும் இடையே கொஞ்சம் கொஞ்சமாக காதல் வளரும். ஆனால், அதனை இருவருமே வெளிப்படுத்திக் கொள்ளாமலே இருப்பார்கள். கடைசியில் ஏர்போர்டில் தனலட்சுமியை விட்டுச் சென்ற பிறகே, வேலுவுக்கு அந்த காதல் இருப்பது தெரியவரும்..
மேலும், மீண்டும் காதலி வந்த பிறகு, வேலு உற்சாகமாக கபடி விளையாட கிளம்புவதெல்லாம்.. Goosebumps-ன் உச்சம்.. அது இன்றும் பலபேரது வாட்ஸ்அப் ஸ்டேடஸ்களில் உலா வருகிறது என்றால் பாருங்களேன்..
இவ்வாறு மாஸ் காட்சியிலும், காதல் காட்சியிலும் விஜய் ஸ்கோர் செய்துக் கொண்டிருக்கும் நேரத்தில், த்ரிஷா சைலன்டாக பல்வேறு இளைஞர்களின் மனதை திருடிக் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் குறும்புத்தனமான பெண் போல் அறிமுகமாகும் அவர், காட்சிகள் நகர நகர, அப்பாவி தனமான பெண்ணாகவும், காதல் வந்த பிறகு, விஜயிடம் இருந்து பிரிவதை தடுப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளும் இன்றும் மனதில் நின்று, ரசிக்க வைக்கின்றன. இதுமட்டுமின்றி, க்ளைமேக்ஸ் காட்சியில், பிரகாஷ் ராஜை உசுப்பேற்றி, விஜயுடன் சண்டை போட வைப்பதற்கு, “கிளிச்ச” என்ற த்ரிஷா பேசும் வசனம், வேற லெவல்.
தனலட்சுமியை பாராட்டிவிட்டு, முத்துப்பாண்டியை பாராட்டாமல் இருந்தால், வரலாறு நம்மை திட்டிவிடும். “செல்லம்.. ஐ லவ் யூ.. அதெல்லாம் நீ ஏன் பேசுற.. அதெல்லாம் நீ பேசக் கூடாது..,” என்று பிரகாஷ் ராஜ் பேசும் வசனங்களும், ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. இன்றும் மேடைகளில் தமிழ் ரசிகர்களிடம் அவர் பேசும்போது, “செல்லம்” என்று கூறியே, உரையை தொடங்குவார். அந்த அளவிற்கு, பலரிடம் பிரகாஷ் ராஜை அந்த கதாபாத்திரம் கொண்டு சென்றது..
கில்லி படத்தின் முக்கிய பலமே என்னவென்றால், அந்த நடிகர்கள் அனைவரும், கதாபாத்திரங்களின் வழியாகவே நினைவில் இருப்பார்கள்.. “சரவண வேலு, தனலட்சுமி, முத்துப்பாண்டி, ஓட்டே நரி, ஆதிவாசி” என்று அந்த படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்களின் பெயர், இன்றும் மனதில் நிலைத்து நிற்கின்றன..
இத்தனைக்கும் இது ஒரு தெலுங்கு ரீமேக் தான்.. ஒக்கடு என்ற பெயரில், மகேஷ் பாபு நடித்திருந்த திரைப்படத்தை தான் விஜய் நடித்திருந்தார். இந்த படத்தில் விஜயின் பங்கு எந்த அளவிற்கு இருந்ததோ, அதே அளவில் இயக்குநர் தரணியையும் நாம் பாராட்டியே ஆக வேண்டும்..
இயக்குநர் தரணி, தனது அடுத்த திரைப்படம் ஒக்கடு என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக் தான் என்பதை முடிவு செய்த பிறகு, ஆந்திராவில் அந்த படம் ஓடிக் கொண்டிருந்த திரையரங்குகளுக்கு சென்று படம் பார்த்தாராம். ரசிகர்கள் எந்த காட்சியை ரசிக்கிறார்கள்.
எதனை கொண்டாடுகிறார்கள்? என்று பல்வேறு விவரங்களை அறிந்துக் கொண்டு, அந்த காட்சியை, இன்னும் மெருகேற்றினாராம். குறிப்பாக, இறுதியில் வரும் கபடி மேட்சும், விஜய்க்கும்-பிரகாஷ் ராஜ்-க்கும் உண்டான சண்டைக் காட்சியும், இரண்டு க்ளைமேக்ஸ் காட்சியை பார்த்தது போல் பிரம்மிப்பை நமக்கு தரும்..
இத்தனை திட்டமிடலுக்கு பின் வெளியானததால் தான், ஒரிஜனல் ஒக்கடுவை விட, நம்ம கில்லி செம மாஸ் எண்டர்டெயினராக இருந்து வருகிறது. அதற்கு உதாரணமாக, அந்த திரைப்படம் எப்போது டிவியில் ஒளிபரப்பினாலும், அதன் டி.ஆா்.பி ரேட்டிங் உச்சத்தில் இருக்கும்.. இப்படி, காதல், ஆக்ஷன், ஸ்போர்ட்ஸ் டிராமா என்று பல்வேறு உள்ளடக்கங்களை கொண்டு, காலத்தால் அழிக்க முடியாத மாஸ் எண்டர்டெயினராக விளங்கிய கில்லி வெளியாகி, இன்றுடன் 19 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனை அறிந்த ரசிகர்கள், 19 Years of ghilli என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி, கொண்டாடி வருகின்றனர்.