Connect with us

Raj News Tamil

சிறுத்தை தாக்கி சிறுமி பலி: பக்தர்களுக்கு புதிய கட்டுபாடு!

இந்தியா

சிறுத்தை தாக்கி சிறுமி பலி: பக்தர்களுக்கு புதிய கட்டுபாடு!

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் பாத்திட்டி பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் தினேஷ் குமார். அவரது மனைவி சசிகலா. கடந்த வெள்ளிகிழமை 8 மணிக்கு லக்‌ஷிதா (6) தனது பெற்றோருடன் திருமலைக்கு மலைப்பாதையில் நடந்து சென்றுக்கொண்டிருந்த போது திடீரென வந்த சிறுத்தை சிறுமியை ஒரு புதருக்குள் அடித்து இழுத்துச் சென்றது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சிறுமியை சிறுத்தை அடித்து கொன்றது சம்பந்தமாக நேற்று திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தர்மா ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிக்க வனப்பகுதியில் கூண்டு வைக்கப்பட்டு உள்ளது. அலிப்பிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் 40 அடி தூரத்திற்கு ஒரு பாதுகாவலர் என 100 பேர் கொண்ட குழுவினர் அமைக்கப்பட்டு உள்ளனர். மேலும் நடைபாதையில் 500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.

டிரோன் கேமரா மூலமும் நடைபாதையை கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. காளி கோபுரம் முதல் நரசிம்ம சாமி கோவில் வரை 2 மீட்டருக்கு ஒரு பாதுகாவலர் நிறுத்தப்பட உள்ளனர். நடைபாதையில் செல்லும் பக்தர்கள் இனி தேவஸ்தான விஜிலென்ஸ் பாதுகாவலர்கள் முன்பாக குழுக்களாக செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

சிறு குழந்தைகளுடன் வரும் பக்தர்கள் தங்களது குழந்தைகளை தங்களுடன் பாதுகாப்பாக அழைத்து வர வேண்டும். குழுக்களாக வரும் பக்தர்கள் சாமி பாடல்களை பாடியபடியும் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டபடியும் நடைபாதையில் வரவேண்டும்.

இதனால் வன விலங்குகள் நடைபாதையில் வருவதை தடுக்க முடியும். அலிப்பிரி மலைப்பாதையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பைக்கில் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

நடைபாதையில் வனவிலங்குகள் வருவதை தடுப்பது குறித்து நிபுணர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் அறிக்கையை சமர்ப்பித்த பிறகு வனத்துறையினருடன் இணைந்து கம்பி வேலிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சிறுத்தை தாக்கி இறந்த லக்ஷிதா குடும்பத்திற்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ.5 லட்சமும், வனத்துறை சார்பில் ரூ.5 லட்சமும் என மொத்தம் ரூ.10 லட்சம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

More in இந்தியா

To Top