திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதையில் நேற்றிரவு தனது குடும்பத்தாருடன் நடந்து சென்றுக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை சிறுத்தை கொன்றுள்ளது.
ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் பாத்திட்டி பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் நேற்று இரவு 8 மணிக்கு பெற்றோருடன் லக்ஷிதா (6) தனது பெற்றோருடன் திருமலைக்கு மலைப்பாதையில் நடந்து சென்றுக்கொண்டிருந்த போது திடீரென வந்த சிறுத்தை சிறுமியை ஒரு புதருக்குள் அடித்து இழுத்துச் சென்றது. தமது கண் முன்னே மகளை சிறுத்தை இழுத்து செல்வதை பார்த்து பெற்றோர்கள் அலறி கூச்சலிட்டனர். சக பக்தர்கள் சிறுத்தையை பின் தொடர்ந்தனர்.
இது குறித்து இரவே திருப்பதி வன அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால், இரவு நேரம் என்பதால் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், இன்று காலை மீண்டும் அப்பகுதியில் வனத்துறையினர் மற்றும் தேவஸ்தான ஊழியர்கள் சிறுமி லக்ஷிதாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு சற்று தூரத்தில், சிறுமி லக்ஷிதாவின் உடல் கண்டு பிடிக்கப்பட்டது. சிறுமியின் உடல் பாதிதான் உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மீதி பாகத்தை சிறுத்தை உட்கொண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இதையடுத்து சிறுமியின் சடலத்தை உடல் கூறாய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிறுமியை சிறுத்தை தாக்கி இழுத்து சென்றதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அலிபிரி மலைப்பாதையில் சிறுத்தை தாக்கியத்தில் 6 வயது சிறுமி பலியான சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.