ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் வார சந்தையில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சந்தையில் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அடுத்த 29-ஆம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ராணிப்பேட்டை வார சந்தையில் ஆடுகள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. இதில் உள்ளூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இன்று அதிகாலை சந்தையில் குவிந்தனர்.
பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சந்தையில் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் அனைத்தும் 5 ஆயிரம் ரூபாய் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை அமோகமாக நடைபெற்றது. நாலு மணி நேரம் நடைபெற்ற விற்பனையில் ரூபாய் 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக சந்தை நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சந்தையில் வாங்கப்பட்ட ஆடுகளை இஸ்லாமியர்கள், பொதுமக்கள் என அனைவரும் மகிழ்ச்சியுடன் ஆடுகளை தங்கள் வாகனங்களின் மூலமாக ஏற்றி சென்றனர்.