சென்னை விமானநிலையத்தில் 2.03 கோடி மதிப்புள்ள 3 கிலோ 953 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல்

சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மற்றும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய 2 விமானங்கள் அடுத்தடுத்து வந்தன. இதை அடுத்து மலேசியா நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, ஏர்ஏசியா பயணிகள் விமானமும் வந்தது.

இந்த 3 விமானங்களில் பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக,சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அந்த 3 விமானங்களில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். சந்தேகப்படும் பயணிகளை நிறுத்தி விசாரணை நடத்தியதோடு, அவர்கள் உடமைகளையும் பரிசோதித்தனர்.

அப்போது மலேசியா நாட்டிலிருந்து ஏர் ஏசியா விமானத்தில் வந்த ஒரு ஆண் பயணியின் ட்ராலி டைப் சூட்கேஸை சந்தேகத்தில் ஆய்வு செய்தனர். அந்த சூட்கேசில் கொடுக்கப்பட்டிருந்த,பைபர் பீடிங்கிற்குள், தங்க சுருள் கம்பிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

அதேபோல் துபாயில் இருந்து வந்த இரண்டு விமானங்களில் வந்த, மற்ற இரண்டு ஆண் பயணிகளின் சூட்கேஸ்களில், தங்க உருளைகள், தங்கக்கட்டிகள் இருந்ததையும் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

3 விமானங்களில் வந்த 3 பயணிகளிடம் இருந்து மொத்தம், 3 கிலோ 953 கிராம் தங்க கட்டிகள் சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூபாய் 2 கோடி. இதை அடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் 3 பயணிகளையும் கைது செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News