அயன் படத்தில் தங்கம் மற்றும் வைர பொருட்களை கடத்தும் நபராக சூர்யா நடித்திருப்பார். அந்த படத்தில், பொருட்களை கடத்துவதற்கு அவர் செய்யும் ஒவ்வொரு திட்டமும், ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணமாக இருந்தது.
இதுமாதிரியான திட்டங்களை நிஜ வாழ்க்கையில் செய்ய முடியுமா என்று பல்வேறு நினைத்திருந்த நிலையில், அப்படி ஒரு பலே திட்டத்தை, விமான பயணி ஒருவர் மேற்கொண்டுள்ளார். அதாவது, துபாயில் இருந்து ஐதராபாத் நகருக்கு விமானம் மூலம், பயணி ஒருவர் வந்துள்ளார்.
அவரிடம் விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், அவர் கொண்டு வந்திருந்த சூட் கேஸ் மீது, அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, சூட் கேஸ் முழுவதும் தேடியதில், எந்தவொரு பொருட்களும் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆனால், சூட் கேஸின் ஸ்க்ரூக்கள் பார்ப்பதற்கு மினுமினுப்பாக இருந்ததால், அதிகாரிகள் அதில் இருந்து ஒன்றை கழட்டி, சோதனை செய்துள்ளனர். அதன்பிறகே, அது தங்கத்தில் செய்யப்பட்டவை என்பது தெரியவந்தது. அதாவது, தங்க கட்டிகளை ஸ்க்ரூக்களை போல மாற்றி, அதன்மூலம் அவர் தங்கத்தை கடத்தி வந்துள்ளார். இதையடுத்து, அந்த விமான பயணியை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், விசாரணை நடத்தி வருகின்றனர்.