தமிழ்நாட்டில் ஒன்பது மத்திய சிறை மாவட்ட கிளை சிறை என ஒட்டுமொத்தமாக 136 சிறைகள் உள்ளன. இங்கு சுமார் 20,000 மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இவர்களை உறவினர்கள் பார்க்க வந்தால் சிறையில் இரும்பு கம்பிகளுக்கு இடையே நின்று பேச முடியும். ஒரே நேரத்தில் 15-க்கு மேற்பட்ட கைதிகளும் அவர்களின் உறவினர்களும் நின்று பேசுவதால் யார் என்ன பேசுகிறார்கள் என்பதை கேட்க முடியாது. ஒரே சத்தமாக இருக்கும் இக்குறையை போக்கும் வகையில் சிறையில் இருந்து உறவினர்களுக்கு டெலிபோன் பூத் மூலம் பேசும் வசதி கொடுக்கப்பட்டது.
இதையடுத்து கொரோனா காலகட்டத்தில் கைதிகளை உறவினர்கள் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் செல்போன் வீடியோ கால் மூலம் உறவினர்களும் பேசுவதற்காக நடவடிக்கையை சிறைத்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
ஒவ்வொரு மத்திய சிறைகளிலும் தலா எட்டு நவீன செல்போன்கள் வாங்கி அதன் மூலம் கைதிகளை அவர் உறவினர்களிடம் பேச வைத்தனர். இதன் மூலம் கைதிகளும் அவர்களின் குடும்பத்தினரும் வீட்டில் இருந்தபடியே பார்த்து பேசி மகிழ்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில் ஒரு படி மேலாக கம்ப்யூட்டர் மானிட்டரில் பார்த்து பேசும் வசதியை தமிழக அரசு மத்திய சிறைகளில் அறிமுகம் செய்தது. ஒன்பது மத்திய சிறைக்கும் 126 கம்ப்யூட்டர் வாங்கப்பட்டு சிறையில் கைதிகள் அறைகளின் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. சேலம் மத்திய சிறையில் எட்டு கம்ப்யூட்டர்களும் கோவை மத்திய சிறையில் 15 கம்ப்யூட்டர்களும் பொருத்தப்பட்டுள்ளது.
இதன்படி மூன்று நாட்களுக்கு ஒரு முறை 12 நிமிடம் நேரம் குடும்பத்தினருடன் பேசலாம் எனவும் ஒரு நிமிடத்திற்கு இரண்டு ரூபாய் 25 பைசா வசூலிக்கப்படும் என்று சிறைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.