கர்நாடகாவின் சட்டமன்ற கூட்டத் தொடர் தற்போது நடைபெற்ற வருகிறது. இந்த கூட்டத் தொடரில் கலந்துக் கொண்ட எதிர்கட்சித் தலைவர் ஆர்.அசோகா, உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “இந்த ஆட்சியில் சட்ட ஒழுங்க சரியாக இல்லை. இந்த அரசாங்கம் உயிருடன் தான் இருக்கிறதா? அல்லது உயிரிழந்துவிட்டதா? இந்த அரசாங்கத்தின் ஆட்சி முடிவதற்கு, பொதுமக்கள் அனைவரும் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்” என்று கூறினார்.
மேலும், “மாநிலத்தின் உள்துறை அமைச்சகத்தை யார் நிர்வகிக்கிறார்கள் என்பது தெரியாத நிலை தான் தற்போது இருக்கிறது. உள்துறை அமைச்சர் ஜி.பரமஸ்வராவை தவிர, மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் தான் அந்த துறைய நிர்வகிப்பதாக தெரிகிறது” என்று விமர்சித்தார்.
மேலும், மாநிலத்தில் நடைபெற்ற, ஹாம்பி பாலியல் வன்கொடுமை வழக்கு, 2 அமைச்சர்கள் தொடர்புடைய தங்கக் கடத்தல் வழக்கு, பல்வேறு கொலை வழக்குகள் குறித்து பேசிய ஆர்.அசோகா, மாநிலத்தின் பாதுகாப்பு மோசம் அடைந்து வருவதாகவும், கன்னட நடிகை ரன்யா ராவின் தங்கக் கடத்தல் விவகாரத்தில், மாநில அரசு அமைதியாக இருப்பதாகவும், குற்றஞ்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து, “காங்கிரஸ் ஆட்சியின் கீழ், கர்நாடக மாநிலம், ரவுடிகளின் மாநிலமாக மாறியுள்ளது” என்றும் விமர்சித்துள்ளார்.