நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள சங்க ரெட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் கத்தியுடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள் மூவரை போலீசார் கைது செய்தனர்.
இப்பள்ளியின் பன்னிரண்டாம் வகுப்பில் உள்ள மாணவர்கள் சிலர் புத்தகப் பையில் கத்தி போன்ற ஆயுதங்கள் வைத்திருப்பதாக தலைமை ஆசிரியருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அங்கு மாணவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மூன்று மாணவர்கள் ஒரு கத்தி மற்றும் கத்தரிக்கோல் ஆகியவற்றை மறைத்து கொண்டு வந்தது தெரிந்தது.
பின்னர் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் நாங்குநேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் மூவரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் சில மாணவர்கள் பள்ளிக்கு முறையாக வராதது, படிப்பில் கவன குறைவு, உள்ளிட்ட பல்வேறு ஒழுங்கீன செயல்பாடுகளில் ஈடுபட்டதால் ஆசிரியர்கள் அவர்களை கண்டித்துள்ளனர்.
மேலும் பள்ளியில் நடந்த தேர்வில் மதிப்பெண்களை குறைத்து விட்டதால் ஆசிரியர்களை பழி வாங்க தீர்த்து கட்டுவதற்காக திட்டமிட்டு கத்தியை கொண்டு வந்ததாகவும் தகவல் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்நிலையில் மூன்று மாணவர்களிடம் இருந்து
ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதனையடுத்து மூவரும் நெல்லை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம் நாங்குநேரி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மாணவர்களின் இது போன்ற சமூக விரோத செயல்களால் ஆசிரியர்கள் உயிருக்கு ஆபத்து உள்ளதாக ஆசிரியர் வட்டாரங்கள் அச்சமடைந்துள்ளனர்.