திருப்பதி மலைப்பாதையில் பெற்றோருடன் சென்ற 6 வயது சிறுமியை சிறுத்தை கொன்றது. இதையடுத்து ஒரு சிறுத்தை கூண்டில் சிக்கியது. ஆனால் சில மணி நேரத்தில் மீண்டும் வேறு ஒரு சிறுத்தை அதே இடத்திற்கு வந்தது.
அப்போது சிலர் சிறுத்தையை புகைப்படம் எடுத்து வனத்துறைக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் பட்டாசு வெடித்து சிறுத்தையை விரட்டியடித்தனர்.
இந்நிலையில் பக்தர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள நடைபாதையில் செல்லும் பக்தர்களுக்கு கைத்தடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, திருப்பதி அலிபிரி வழியாக மலையேறும் பக்தர்களுக்கு தேவஸ்தான பாதுகாவலர்கள் பக்தர்களுக்கு கைத்தடிகளை வழங்கினர்.
நடைபாதையில் இரவு நேரங்களில் அதிக அளவில் வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள் பொருத்தப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் 12 வயதுக்குட்பட்டோருக்கு காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே நடைபயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.