சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் சுந்தர்ராஜ் (39). இவர் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் மாதவரம் பேருந்து நிலையத்தில் சவாரிக்காக காத்திருந்தார். அப்போது அவருடைய ஆட்டோவில் 3 பேர் எறியுள்ளனர். ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது, 3 பேரும் சந்தேகப்படும் வகையில் பேசியுள்ளனர்.
இதையடுத்து அருகில் உள்ள யானைகவுனி காவல் நிலையத்துக்கு சென்றார். சந்தேக நபர்கள் 3 பேர் தனது ஆட்டோவில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.அங்கு விரைந்த போலீஸார் 3 பேரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். பிடிபட்ட 3 பேரும் ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த இளைஞர்கள் என்பது தெரிந்தது.
அவர்கள் கொண்டு வந்த பைகளை சோதனையிட்டபோது, அதில் கட்டுக்கட்டாக ரூ.2 கோடியே ஒரு லட்சம் ஹவாலா பணம் (உரிய ஆவணம் இல்லாத பணம்) இருந்தது தெரிந்தது.அதை பறிமுதல் செய்த போலீஸார், பணத்தை வருமான வரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். சாமர்த்தியமாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநரை போலீஸ் உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.