வெப்ப அலை எச்சரிக்கை.. 8 மாநிலங்களில் உயரும் வெப்ப நிலை..

மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே, ரைகாட், மும்பை ஆகிய பகுதிகளில், அதிகபட்ச வெப்பநிலையின் காரணமாக, ஏப்ரல் 27-ல் இருந்து 29- வரை வெப்ப அலை ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு, இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 15 மற்றும் 16-ஆம் தேதிகளில், மும்பை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில், கடுமையான வெப்பநிலை நிலவி வந்தது. வெப்பநிலையின் அளவு 41 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர்ந்திருந்தது.

இந்திய வானிலை மையத்தின் கூற்றுப்படி, வெப்ப அலை என்ற நிலையில் இருந்து, கடுமையான வெப்ப அலை என்ற நிலை, மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவின் சில பகுதிகளில், 5 நாட்களுக்கு தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த திங்கள் கிழமை அன்று, ஒடிசாவின் தலைநகரமான புபனேஸ்வர் பகுதியில், அதிகபட்சமாக 43.8 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது.

வானிலை ஆய்வு மையம் தனது அறிவிப்பில், ஏப்ரல் 28-ஆம் தேதி வரை, 40 டிகிரி செல்சியஸ்-க்கும் மேலாக, ஒடிசாவில் வெப்பநிலை நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், வெப்ப அளவு உயர்ந்து வருவதன் காரணமாக, அம்மாநில அரசு, பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையை முன்னதாகவே அறிவித்திருந்தது.

இதற்கிடையே, தமிழ்நாட்டின் சில பகுதிகள், கர்நாடகா, மேற்கு வங்கம், ஜார்காண்ட், பீகார், தெலங்கானா, உத்தரபிரதேசம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில், கடந்த செவ்வாய் கிழமையில் இருந்து ஏப்ரல் 28-ஆம் தேதி வரை, வெயில் சுட்டெரிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இவ்வாறு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சுட்டெரித்து வரும் வெயில் குறித்து, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானி நரேஷ் குமார், ஏ.என்.ஐ-க்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “வரும் 2-3 நாட்களுக்கு, டெல்லியில் 38 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, கிழக்கு இந்தியாவின் ஒரு சில பகுதிகளில், 44 டிகிரி செல்சியஸ் வரை, வெப்பநிலை பதிவாகியுள்ளது. வரும் 5 நாட்களில், கிழக்கு இந்திய பகுதிகள் முழுவதும், 44 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எதிர்கொள்ளும். ஆனால், வடமேற்கு இந்திய பகுதிகளில், 41 டிகிரி செல்சியஸ் வரை மட்டும் தான் வெப்பநிலை உயரும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

என்னதான் இவ்வாறு வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தாலும், கடந்த செவ்வாய் கிழமை அன்று, டெல்லியில் திடீரென வானிலை மாறி, இடி மின்னலுடன், கனமழை பெய்தது. இந்த கனமழையின் காரணமாக, டெல்லிக்கு வரும் குறைந்தபட்சம் 15 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன.

அதிகப்படியான வெப்பத்தின் காரணமாக, இந்திய வானிலை ஆய்வு மையம், சில அறிவுரைகளை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது. அதன்படி, வெயிலில் நீண்ட நேரம் நிற்க வேண்டாம் என்றும், அதிகப்படியான தண்ணீரை குடிக்க வேண்டும் என்றும், நீரேற்றத்துடன் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. மேலும், லேசான நிறங்களை கொண்ட ஆடைகளை உடுத்த வேண்டும் என்றும், இலகுவான மற்றும் பருத்தியிலான ஆடைகளை பயன்படுத்த வேண்டும் என்றும், குடை அல்லது தொப்பியை அணிந்து தலையை மறைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இதுமட்டுமின்றி, மிகவும் கடினமான வேலைகள் ஏதாவது இருந்தால், அதனை வெயில் குறைவாக உள்ள நேரங்களுக்கு தள்ளிப் போடுங்கள் என்றும் கூறியுள்ளது.

RELATED ARTICLES

Recent News