சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகுதிகளில் அதிகாலை இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஒருசில இடங்களில் காலை 6 மணியளவில் மழை ஓரளவு நின்றது.
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட திருப்போரூர், கேளம்பாக்கம், மாமல்லபுரம், கோவளம், முட்டுக்காடு பகுதிகளில் பெய்த கனமழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சார்ஜா, துபாய் விமானங்கள் தரை இறங்க முடியாமல் திருப்பி விடப்பட்டன. சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு புறப்பட வேண்டிய 10 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. மேலும் துபாய், மும்பை, பாரீஸ் உள்ளிட்ட இடங்களுக்கு புறப்பட்ட விமானங்கள் சில மணி நேரம் தாமதமாக புறப்பட்டன. இதனால் விமானப் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.