கரூர் மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் கோடை வெயில் தொடங்கி அக்னி நட்சத்திரம் முடியும் வரை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்த நிலையில், தற்போதும் கரூர் மாவட்டத்தில் 100 டிகிரிக்கு மேல் வெயில் அளவு பதிவாகி வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

இந்த நிலையில் கரூர் மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 1 மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கரூர் மாநகரப் பகுதிகளான தாந்தோணிமலை, காந்திகிராமம், வெங்கமேடு ஆகிய பகுதிகளிலும், சுற்றுவட்டார பகுதிகளான வெள்ளியணை, உப்பிடமங்கலம், புலியூர் ஆகிய பகுதிகளிலும் கனமழையும், ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது.

கடந்த ஒரு வாரமாக கடும் வெயிலின் தாக்கத்தால் சிரமத்திற்கு ஆளாகி வந்த பொதுமக்கள், இந்த திடீர் மழையின் காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News