டிசம்பர் 8ஆம் தேதி இந்த 13 மாவட்டங்களில் கனமழை : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

இன்று காலை தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிறகு புயலாக வலுவடைந்து டிசம்பர் 8-ம் தேதி காலை வடதமிழகம் – புதுவை, மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளின் அருகில் வந்தடையக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

டிசம்பர் 8ஆம் தேதி கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.