அமராவதி அணையில் நீர்வரத்து 14,000ஆக உயர்வு..! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!

அமராவதி அணையிலிருந்து 13,000 கன அடி நீர் வெளியேற்றம், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையிலிருந்து திருப்பூா் முதல் கரூா் வரையிலான 2-மாவட்டங்களில் உள்ள சுமாா் 55-ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் இந்த அணை நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் விளங்கிவருகிறது. கடந்த ஒரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் அமராவதி ஆற்றின் முக்கிய நீராதாரமான பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதன் காரணமாக அமராவதி அணைக்கு நீர்வரத்து 14,000-ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் ஆற்றின் இருகரையும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதைத்தொடர்ந்து அமராவதி அணையில் இருந்து 13,000-ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் 90-அடி உயரமுள்ள அணையின் நீா்மட்டம் இன்று காலை நிலவரப்படி 87 அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் அமராவதி ஆற்றின் துணை நதிகளான வரதமா நதி, குதிரை ஆறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அமராவதி ஆற்றின் கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறையினா் தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனா். இதையடுத்து அணையின் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுப் பணித்துறையினர் 24-மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சுற்றுவட்டார பொதுமக்கள் கரையோர பகுதிகளுக்கும், ஆற்றி குளிக்க வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.