Connect with us

Raj News Tamil

நேருவின் நினைவு தினம்.. அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் தலைவர்கள்..

இந்தியா

நேருவின் நினைவு தினம்.. அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் தலைவர்கள்..

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் ஜவஹர்லால் நேரு. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்ற பெருமையை கொண்ட இவர், 3 முறை பிரதமர் பதவியை அலங்கரித்துள்ளார்.

தொடர்ச்சியாக மக்கள் பணி ஆற்றிய நேரு, கடந்த 1964-ஆம் ஆண்டு, மே 27-ஆம் தேதி அன்று காலமானார். இந்நிலையில், இன்று இவரது 60-வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

இதனையொட்டி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர், டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேருவின் நினைவிடத்தில், மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கார்கே, “பண்டிதர் ஜவஹர்லால் நேருவின் ஒப்பீடு அற்ற பங்களிப்பு இல்லாமல், இந்தியாவின் வரலாறு என்பது முழுமையற்றது. அறிவியல், பொருளாதாரம், வணிகம் மற்றும் பல்வேறு துறைகளில், இந்தியாவை முன்னோக்கி எடுத்து சென்றவர் நேரு” என்று கூறினார்.

மேலும், “நாட்டின் பாதுகாப்பு, நாட்டின் வளர்ச்சி மற்றும் நாட்டின் ஒற்றுமை என்பது தான், நம் அனைவரது தேசிய மதம் ஆகும் என்று ஜவஹர்லால் கூறினார். இன்று கூட, காங்கிரஸ் கட்சி இந்த நீதியின் பாதையை தான் பின்பற்றி வருகிறது” என்றும் தனது பதிவில் கார்கே குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, வயநாடு எம்.பி ராகுல் காந்தி, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நவீன இந்தியாவை வடிவமைத்தவரும், இந்தியாவின் முதல் பிரதமருமான பண்டிதர் ஜவஹர்லால் நேருக்கு, அவரது நினைவு தினத்தன்று, மரியாதை மிகுந்த அஞ்சலி.

ஒரு தொலைநோக்கு பார்வை கொண்டவராக, விடுதலை இயக்கம், ஜனநாயகத்தை நிறுவதல், மதசார்பின்மை, அரசியலமைப்பின் அடித்தளத்தை உருவாக்குதல் போன்ற பல்வேறு பணிகளின் மூலமாக, தனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அர்ப்பணித்தார்” என்று குறிப்பிட்டிருந்தார்.

More in இந்தியா

To Top