மொஹரம் பண்டிகைக்கு பூக்குழி இறங்கிய இந்துக்கள்…!

சிவகங்கை அருகே மொஹரம் பண்டிகையையொட்டி பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய இந்துக்களுக்கு அப்பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுத்தந்தது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே முதுவன் திடல் கிராமத்தில் மொஹரம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் வருடாவருடம் மொஹரம் பண்டிகைக்கு இந்துக்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்த கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லிம்கள் அதிகளவில் வசித்துள்ளனர். அங்கு பாத்திமா நாச்சியார் என்ற பெண் வாழ்ந்து வந்தாகவும், அவரை அப்பகுதி மக்கள் தெய்வமாக தொழுது வந்ததாகவும் கூறப்படுகிறது.

அவர் மறைந்த பிறகு முதுவன் திடல் கிராமத்தின் மையப் பகுதியில் தர்கா மற்றும் பள்ளிவாசல் அமைத்து முஸ்லிம்கள் மட்டுமன்றி அப்பகுதி மக்களும் தெய்வமாக வழிபட்டு வந்ததாக கூறப்படுகிறது. நாளடைவில் அந்த பகுதியில் இந்துக்கள் அதிகளவில் குடியேர ஆரம்பித்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் மொஹரம் பண்டிகை அன்று பாத்திமா நாச்சியாரை நினைவு படுத்தும் வகையில் ஆண்டுதோரும் பூக்குழி எடுத்துவருகின்றனர். இந்த திருவிழாவின்போது திருமண வரம், குழந்தை வரம் போன்றவற்றுக்காக நேர்த்திக்கடன் செலுத்துவதும், நினைப்பது நடப்பதாகவும் முதுவன் திடல் கிராம மக்கள் நம்புகின்றனர். இதையொட்டி இந்த ஆண்டும் பூக்குழி எடுத்து தங்களது பக்தியை வெளிபடுத்தினர். இறுதியாக அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தை பொதுமக்கள் மேளதாளத்துடன் கிராம எல்லை வரை தூக்கிச் சென்று மீண்டும் தர்காவிற்கு கொண்டு வந்து நிறுத்திவிடுவார்கள். இச்செய்தி பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது,மேலும் இது இரு சமூதாய ஒற்றுமையை வெளிகாட்டுகிறது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.