காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ரேபரேலி, வயநாடு ஆகிய இரண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். இந்த இரண்டு தேர்தலிலும் வெற்றி பெற்றதால், தற்போது வயநாடு தொகுதியில் ராஜினாமா செய்துவிட்டார்.
இதனால், இந்த தொகுதிக்கு இடைத் தேர்தல் நடக்க உள்ளது. இதில், காங்கிரஸ் கட்சியின் சார்பில், ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளார். இதனை அறிந்த பாஜகவினர், கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாஜகவின் கேரள மாநில தலைவர் கே.சுரேந்திரன் எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “வயநாடு தன்னுடைய குடும்பம் என்று ராகுல் காந்தி கூறினார். தற்போது, வயநாடு தொகுதியில் நடக்க உள்ள இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தியை வேட்பாளராக்க அவர் முடிவு செய்திருக்கிறார்.
இதேபோல், பாலக்காடு இடைத்தேர்தலில், தன்னுடைய மாமா ( பிரியங்கா காந்தியின் கணவன் ) ராபர்ட் வத்ராவை, ராகுல் காந்தி களமிறக்குவார் என்பதை, நிச்சயம் நம்பலாம்.
தங்களது குடும்பத்தின் நலனுக்கு சேவையாற்ற பயன்படுத்தப்படும் கருவிதான் காங்கிரஸ் கட்சி என்பது, சந்தேகத்திற்கு அப்பால், மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது” என்று கூறியுள்ளார்.
இவர் மட்டுமின்றி, பாஜகவின் செய்தி தொடர்பாளர் ஷேஷாத் பூனாவாலாவும், காங்கிரஸை விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசும்போது, “காங்கிரஸ் ஒரு கட்சி அல்ல.. அது ஒரு குடும்ப நிறுவனம் என்பது உறுதியாகியுள்ளது” என்று விமர்சித்தார்.