மத்திய அரசின் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் கடலூர் மாவட்டம், நெய்வேலியில் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 10,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இன்று வழக்கம்போல தொழிலாளர்கள் காலை ஷிஃப்டில் பணிபுரிந்து வந்தனர்.பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு தயிர் சாதமும், இட்லியும் வழங்கப்பட்டது. அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் ஒரு சிலருக்கு வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டுள்ளது. அவர்கள் சாப்பிட்ட சாப்பாட்டில் எலி ஒன்று இறந்துகிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து உணவை சாப்பிட்ட 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம், என்.எல்.சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இது குறித்து என்.எல்.சியின் மக்கள் தொடர்பு அலுவலர் அப்துல் காதர், “எலி சாப்பாட்டில் இல்லை. அந்த பக்கமாக ஓடியியிருக்கிறது. அதை பார்த்துதான் அப்படி கூறியிருக்கிறார்கள். யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. தொழிலாளர்கள் நன்றாக இருக்கிறார்கள்” என அலட்சியமாக பேசியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.