கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, தேர்ப்பேட்டையில் வசித்து வந்தவர் நந்தினி(25), இவருக்கு 2 மகன்கள் உள்ள நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு அவரது கணவர் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் பார்வதி நகரை சேர்ந்த ரஞ்சித் என்பவருடன் நந்தினிக்கு தொடர்பு ஏற்ப்பட்டுள்ளது.
ஏற்கனவே மனைவியை பிரிந்த ரஞ்சித், நந்தினி,அவரது 2 மகன்களுடன் வீட்டை விட்டு வெளியேறி ஒசூர் அடுத்த ஆலூர் கிராமத்தில் குடியேறி உள்ளனர். ரஞ்சித் நந்தினியின் மகன்களை அவ்வபோது அடித்து வந்ததால் 6 வயது மூத்த மகனை விடுதியில் சேர்த்துவிட்டு, 3 வயதான இளைய மகன் ஜகனுடன் இருந்துள்ளனர்.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக குழந்தை ஜகனை ரஞ்சித் டிசம்பர் 6ம் தேதி பீர்பாட்டிலால் தலையில் தாக்கியதில் படுகாயங்களுடன் 7ம் தேதி ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று டிசம்பர் 22 ம் தேதி ஒசூர் திரும்பிய நிலையில் கடந்த 27ம் தேதி குழந்தை உயிரிழந்ததாக ஒசூர், கோகுல்நகர் சுடுகாட்டில் குழந்தையை புதைத்துள்ளனர். இது வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக கள்ளக்காதலன் ரஞ்சித், நந்தினியை மிரட்டியதாக கூறப்படுகிறது.
கடந்த 10ம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பினை வாங்க நந்தினியின் தாய் வள்ளி, நந்தினி வீட்டிற்கு குடும்ப அட்டை வாங்க சென்றபோது இளைய மகன் குறித்து கேட்டபொழுது இறந்துவிட்டதாக கூறியதால் அதிர்ச்சியடைந்த வள்ளி இதுக்குறித்து குழந்தையின் பெரியப்பா சுரேசிற்கு தகவல் அளித்துள்ளார். அவர் இது குறித்து ஒசூர் அட்கோ போலிசில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் கள்ளக்காதலன் ரஞ்சித், தாய் நந்தினி ஆகியோர் இருவரையும் நேரில் சுடுகாட்டிற்கு அழைத்து சென்று புதைத்த குழந்தையை வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை மேற்க்கொள்ளப்பட்டது.
இதுக்குறித்து ஒசூர் அட்கோ போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு பின் ரஞ்சித்தை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு கைது செய்து சிறையில் அடைத்தனர்.