கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளுக்கும், இன்று ஒரே கட்டமாக, சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கே தொடங்கப்பட்ட வாக்குப்பதிவு, தற்போது வரை அமைதியான முறையில் நடந்து வருகிறது. ஆனால், குறைவான அளவிலேயே வாக்குப் பதிவு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், 11 மணி நேர நிலவரப்படி பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 20.99 சதவீத வாக்குகள் மட்டுமே, பதிவாகியுள்ளன. இதற்கிடையே, வாக்கு செலுத்திய பின், இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூா்த்தியின் மனைவி சுதா மூர்த்தி, செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “எங்களைப் போன்ற வயதானவர்கள் காலை 6 மணிக்கே, வாக்குகளை செலுத்திவிட்டோம். எங்களைப் பார்த்து, இன்றைய இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதேபோன்று, செய்தியாளர்களை சந்தித்த இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, “வாக்களிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை, இளைஞர்கள் அறிய வேண்டும். அதனை அவர்களுக்கு எடுத்துரைப்பு, பெரியவர்களின் பொறுப்பும் ஆகும். அதைத் தான் என் பெற்றோரும் எங்களிடம் செய்தார்கள்” என்று கூறினார்.