திருத்துறைப்பூண்டி அருகே திருமணமான மூன்றே மாதத்தில் கணவன் மனைவி- தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே ஆட்டூர் தோப்புத் தெருவை சேர்ந்தவர் சமரச பாண்டியன் மகன் உதய பிரகாஷ் (23). இவர் நாகப்பட்டினம் மாவட்டம் நீடூரை சேர்ந்த முருகானந்தம் மகள் ஹேமா (21) என்பவரை கடந்த மூன்று மாதத்துக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமணத்துக்கு ஹேமாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திருமணத்துக்கு பின்னர் உதய பிரகாஷ், ஹேமாவுடன் ஆட்டூரில் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில், ஹேமா அவரது வீட்டில் தூக்கிட்ட நிலையிலும், பிரகாஷ் வீட்டின் அருகாமையில் உள்ள ஒரு புளிய மரத்தில் தூக்கிட்டு நிலையிலும் பிணமாக தொங்கியுள்ளார்.
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்துக்கு வந்த போலீசார் இரண்டு உடல்களையும் கைப்பற்றி திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், திருமணமான ஒரு சில நாட்களிலேயே பிரகாஷ் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனை ஹேமா கண்டித்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு நிகழ்ந்து வந்த நிலையில் நேற்று இரவும் இருவருக்கும் சண்டை நடந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து இரவு, ஹேமா வீட்டுக்குள் தூக்கிட்டு கொண்டார். அதன் பின்னர் பிரகாஷ் வீட்டு வாசலில் உள்ள புளிய மரத்தில் தூக்கிட்டுள்ளார் என போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணையும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.