மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த மனைவியை ஓட ஓட விரட்டி வெட்டிய கணவன்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள தாளையம் பகுதியை சேர்ந்தவர் மணியன்(43). லாரி ஓட்டுனரான இவருக்கு கற்பகபிரியா(35) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 5ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் கற்பக பிரியா தனது இரண்டு குழந்தைகளுடன் பழனி அருகே உள்ள வி. கே. மில்ஸ் பகுதியில் உள்ள தனது தாயுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு வி. கே. மில்ஸ் பகுதியில் உள்ள மனைவியின் வீட்டிற்கு சென்ற மணியன் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும் வீட்டின் கதவை உடைத்து சேதப்படுத்தி மனைவியை தாக்கியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் குடிபோதையில் இருந்த மணியனை மிரட்டி அனுப்பிவைத்தனர்.

காயமடைந்த கற்பகபிரியாவை பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இந்நிலையில் இன்று காலை 8 மணியளவில் பழனி அரசு மருத்துவமனைக்கு வந்த கணவன் மணியன், சிகிச்சை பெறவந்த தனது மனைவி கற்பகபிரியாவை தேடிகண்டுபிடித்து, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டினார்.

இதையடுத்து கற்பகபிரியா தப்பி ஓட முயன்றபோது, விடாமல் விரட்டி சென்ற மணியன் மனைவி கற்பக பிரியாவின் இரண்டு கால்களையும் சரமாரியாக வெட்டியுள்ளார். இதைக் கண்ட நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இதனால் பழனி அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மனைவியை வெட்டிய போது மணியனின் தலையிலும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அரசு மருத்துவமனை ஊழியர்கள் படுகாயமடைந்த கற்பகபிரியாவை மீட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கால்களில் மட்டும் வெட்டியதால் உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் அறிந்து வந்த பழனி நகர போலீசார் கணவன் மணியனை கைது செய்து சிகிச்சை அளித்து விசாரணை நடத்த வருகின்றனர். பழனி அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் முன்னிலையில் மனைவியை ஓட ஓட விரட்டி கணவனே வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News