மதுரை மாவட்டம் தெற்குவாசல் பகுதியை சேர்ந்தவர் வர்ஷா. 19 வயதாகும் இவருக்கும், 23 வயதாகும் பழனிகுமார் என்பவருக்கும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது.
ஆனால், திருமணமான ஒரே மாதத்தில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த வர்ஷா, தனது பெற்றோரின் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 2-ஆம் தேதி அன்று, வீட்டின் அருகே வர்ஷா நடந்து வந்தார். அப்போது, அங்கு வந்த பழனிகுமார், பயங்கர ஆயுதங்களை கொண்டு, தனது மனைவியை கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். இதையடுத்து, காவல்நிலையத்திற்கு சென்ற அவர், கொலை செய்ததை ஒப்புக்கொண்டு சரணடைந்தார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது மனைவி தன்னைவிட்டு பிரிந்த பிறகு, மறுமணம் செய்வதாக வாட்ஸ் அப்பில் ஸ்டேடஸ் வைத்ததாகவும், அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை செய்தேன் என்றும் தெரிவித்தார்.
ஆனால், இதுதொடர்பாக காவல்துறையினர் பேசும்போது, பழனிகுமாரின் வாக்குமூலம் முன்னுக்கு பின் முரணாக இருப்பதாகவும், எனவே இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றும் தெரிவித்தனர்.