ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள வித்யாநகர் காலனியை சேர்ந்தவர் டில்லி பாபு. ஆசிரியராக பணியாற்றி வரும் இவருக்கு, ஹேமலதா என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். டில்லி பாபுவை போன்று, ஹேமலதாவும் ஆசிரியர் பணி தான் செய்து வந்துள்ளார்.
ஹேம லதாவின் நடத்தை மீது, கடந்த 15 ஆண்டுகளாக டில்லி பாபுவுக்கு சந்தேகம் இருந்துள்ளது. இதனால், தம்பதியினர் இருவருக்கும் இடையே, அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று, குடிநீர் பிடிப்பதற்காக, வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார்.
அப்போது, அங்கு வந்த டில்லி பாபு, மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதில், இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த டில்லி பாபு, தனது கையில் இருந்த அரிவாளை எடுத்து, மனைவியின் தலையிலேயே வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இந்த கொடூர தாக்குதலில் படுகாயம் அடைந்த ஹேம லதா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக உள்ள டில்லி பாபுவை தேடி வருகின்றனர். உயிரிழந்த தாயின் சடலத்தின் முன்பு, ஹேம லதாவின் மகன்கள் கதறி அழுத சம்பவம், அங்கிருந்தோரை கண்கலங்க வைத்தது.