மது அருந்துவது நாட்டுக்கும், வீட்டுக்கும், உடலுக்கும் கேடு என்று எவ்வளவு முறை விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், அதனை அருந்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மதுப் பழக்கத்தின் காரணமாக தான், குற்றங்களும் அதிக அளவில் நடப்பதாக, புள்ளி விவரமும் சொல்கின்றன. இதனை மெய்பிக்கும் வகையில், இன்னொரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தர்மய்யாவும், அவரது மனைவி லட்சுமியும், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள மாந்தோப்பில் வேலை பார்த்து வந்தனர். இருவருக்கும் இடையே குடிப்பழக்கம் இருப்பதால், இருவரும் தினமும் மது அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 22-ஆம் தேதி அன்று, மது வேண்டும் என்று லட்சுமி கேட்டுள்ளார். ஆனால், தர்மய்யாவால், அன்றைய தினம், மது வாங்கிக் கொடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், கணவர் மீது ஆத்திரம் அடைந்த லட்சுமி, அடுத்த நாள், சமையல் செய்யாமல் இருந்துள்ளார்.
இதுதொடர்பாக, இருவருக்கும் இடையே, தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றிய நிலையில், தனது கையில் இருந்து மண்வெட்டியை எடுத்து, மனைவியை தர்மய்யா தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலில், அவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இதையடுத்து, என்ன செய்வது என்ற தெரியாமல் திகைத்த அவர், அந்த மாந்தோப்பிலேயே புதைத்துள்ளார். பின்னர், இந்த சம்பவ குறித்து அறிந்த காவல்துறையினர், தர்மய்யாவை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.