சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் விகடன் பிரசுரம்- வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனம் இணைந்து வெளியிட்டுள்ள ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்திராகக் கலந்து கொண்ட தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நூலை வெளியிட அம்பேத்கரின் பேரனும் எழுத்தாளருமான ஆனந்த் டெல்டும்டே, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு நூலின் பிரதிகளை பெற்றுக் கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா, ” 2026 தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும். பிறப்பால் அனைவரும் சமம் என்ற கருத்தியலை அம்பேத்கர் உருவாக்கியதைப் போல பிறப்பால் ஒரு முதல்வர் இங்கு உருவாக்கப்படக் கூடாது. தமிழகத்தை ஒரு கருத்தியல் தலைவர்தான் ஆளவேண்டும்” என்று பேசியிருந்தார். மேலும், தவெக தலைவர் விஜய்யும் திமுகவை விமர்சித்துப் பேசியிருந்தார்.
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம், நடிகர் விஜய் பேச்சு குறித்து கேட்டதற்கு, “மன்னிக்கவும்… நான் சினிமா செய்திகளை பார்ப்பதில்லை” என்றார்.
அதைத் தொடர்ந்து, மன்னராட்சி குறித்து ஆதவ் அர்ஜுனா பேசியது தொடர்பான கேள்விக்கு, “யாருங்க இங்க பிறப்பால் முதல்வரானது? மக்களால் தேர்ந்தெடுத்துதான் இருக்கிறோம். மக்களாட்சிதான் நடக்கிறது. இந்த அடிப்படை அறிவுகூட இல்லாமல் பேசி இருக்கிறார்” என்று ஆவேசமாக கூறினார் உதயநிதி ஸ்டாலின்.