மேற்கு வங்க மாநில பாஜகவின் எக்ஸ் பக்கத்தில், சமீபத்தில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. இந்த வீடியோவில், பெண் வனத்துறை அதிகாரியுடன், மேற்கு வங்க அமைச்சர் அகில் கிரி வாக்குவாதம் செய்துள்ளார்.
மேலும், அந்த பெண் அதிகாரிக்கு, அவர் மிரட்டல் விடுத்திருந்ததும், வீடியோவில் பதிவாகியிருந்தது. இந்த வீடியோவை பகிர்ந்த பாஜக, “அமைச்சரவையில் இருந்து இந்த அமைச்சரை நீக்கும் தைரியம் மம்தா பானர்ஜிக்கு உள்ளதா? இவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா?” என்று பல்வேறு கேள்விகளை முன்வைத்திருந்தது.
வெளியான சில மணி நேரங்களிலேயே, இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது, இது மம்தா பானர்ஜியின் கவனத்திற்கு சென்றதையடுத்து, அந்த அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதாவது, அவர் அமைச்சர் பதவியில் இருந்து தற்போது ராஜினாமா செய்திருக்கிறார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அகில் கிரி, அவர்களது பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், “நான் எதையும் சொல்ல மாட்டேன். அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று கட்சி ஆணையிட்டது. அதனால், நான் ராஜினாமா செய்துள்ளேன்.
நான் ஒரு சட்டமன்ற உறுப்பினர். இதுதான் சட்டமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாள். எனவே, நான் அங்கு சென்றுக் கொண்டு இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
“வனத்துறையின் மூலம் எழுப்பப்பட உள்ள புகாரை, இனிமேல் முதலமைச்சர் கவனிப்பார். நான் அவர்களுடைய புகார் குறித்து எதுவும் பேச மாட்டேன். இந்த சம்பவம் குறித்து நான் வருத்தமும் அடையமாட்டேன்” என்று கூறியுள்ளார்.