தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் குழு கூட்டம், அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்ட தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தார்.
இவரது இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை, தனது மாமனாரின் பணத்தில் நான் வாழவில்லை என்றும், லாட்டரி டிக்கெட்டை விற்பனை செய்யவில்லை என்றும் கூறினார். இந்நிலையில், ஆதவ் அர்ஜூனாவின் மச்சானாகிய ஜோஷ் சார்லஸ் மார்டின், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், அவர் கூறியிருப்பது பின்வருமாறு:-
“தமிழ்நாடு மக்களின் நலனுக்காக தொடர்ச்சியாக பணியாற்றி வரும் அண்ணாமலைக்கு எதிராக, ஆதவ் அர்ஜூனா பேசிய தவறான வார்த்தைகளுக்கு கண்டனத்தையும், மன்னிப்பையும் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “ஆதவ் அர்ஜூனா தனது மாமனாரின் பணத்தை தவறாக பயன்படுத்துகிறார் என்ற அண்ணாமலையின் கருத்துக்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன்” என்றும், “ஆதவ் அர்ஜூனா தனது குடும்பத்தின் நற்பெயரை களங்கப்படுத்துகிறார்” என்றும், தெரிவித்தார்.
தொடர்ந்து, “இவரது முட்டாள்தனமான கருத்துக்களுக்கு, எந்தவிதத்திலும் எனக்கு தொடர்பு இல்லை என்பதை தற்போது தெளிவுப்படுத்திக் கொள்கிறேன்” என்றும் “அவரது நடவடிக்கையின் காரணமாக, ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், எனது நற்பெயரை காப்பாற்றிக் கொள்வதற்கு, அனைத்துவிதமான சட்டநடவடிக்கையும் நான் எடுப்பேன்” என்றும், தெரிவித்துள்ளார்.