பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் பேசும்போது, “நான் ஒரு கடவுளின் அவதாரம். நான் மனிதப்பிறவியே அல்ல” என்று பேசியிருந்தார். இவரது இந்த பேச்சுக்கு, எதிர்கட்சியினர் வழக்கம்போல், தங்களது விமர்சனங்களை முன்வைத்தனர்.
இந்நிலையில், டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், பிரபல ஊடகமான ஏ.என்.ஐ-க்கு இன்று பேட்டி அளித்திருந்தார்.
அதில், “பாஜகவுக்கு எதிராக, மக்கள் மத்தியில் மிகப்பெரிய கோபம் உள்ளது. பணவீக்கம் மற்றும் வேலையின்மையால், பொதுமக்கள் மிகவும் எரிச்சல் அடைந்துள்ளனர்.
இந்த பிரச்சனையை பிரதமர் சரி செய்வார் என்று பொதுமக்கள் நம்புகிறார்கள். ஆனால், அவர்கள் டிவியில் பிரதமர் மோடியின் பேச்சை கேட்கும்போது, அவதூறாக பேசுவதை கேட்கிறார்கள்” என்று கூறினார்.
தொடர்ந்து, “நீங்கள் இண்டியா கூட்டணிக்கு வாக்கு செலுத்தினால், அவர்கள் உங்களது எருமை மாடுகளில் ஒன்றை எடுத்துக்கொள்வார்கள், உங்களது மங்கல்சூத்ராவை எடுத்துக்கொள்வார்கள் என்று மோடி தொடர்ந்து பேசிக் கொண்டு இருக்கிறார்.
மகாராஷ்டிராவில் பிரதமர் மோடி பேசும்போது, உத்தவ் தாக்கரே, அவரது தந்தையின் போலியான மகன் என்று பேசினார். ஆனால், பொதுமக்கள் இதனை எதிர்பார்க்கவில்லை. அவர்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைப்பது தொடர்பான பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்” என்று கூறினார்.
“ஒரு பக்கம் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் பிரதமர் மோடி, அவதூறாக பேசுவதில் பிசியாக உள்ளார்” என்று கூறினார்.
“இப்போது, முற்றிலும் வேறொரு உலகத்தில் பிரதமர் மோடி இருக்கிறார். நீங்கள் அவரது 10-12 நேர்காணல்களை எடுத்துக் கொண்டால், நான் ஒரு சாதாரண மனிதன் இல்லை என்பதை, அவர் மிகவும் ஓபனாக சொல்கிறார். நான் ஒரு கடவுளின் அவதாரம், நான் தாயிடம் இருந்து பிறக்கவில்லை.
நேரடியாக இந்த உலகத்திற்கு வந்துவிட்டேன் என்று மோடி கூறுகிறார். இன்று, இந்த நாட்டின் மக்களிடம் நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன், அவர்களும், பிரதமர் மோடி கடவுள் என்று நம்புகிறார்களா? நாங்கள் கடவுள் ராமர், கிருஷ்ணர், சிவன் ஆகியோரிடம் நம்பிக்கை வைத்துள்ளோம். நாங்கள் எப்படி அவரை கடவுளாக ஒத்துக்கொள்ள முடியும்?” என்று கூறினார்.
“தற்போது, அவரை பின்பற்றுபவர்களும் இதே விஷயத்தை தான் கூறி வருகிறார்கள். பிரதமர் மோடியின் பக்தர் தான் கடவுள் ஜகன்நாத் என்று சம்பித் பத்ரா கூறினார், பிரதமர் மோடி கடவுள்களுக்கெல்லாம் கடவுள் என்று ஜே.பி.நட்டா கூறுகிறார், அவர்கள் வாழும் உலகத்தில், மக்கள் மிகவும் துன்பத்தின் கீழ் இருக்கின்றனர்” என்று கூறினார்.
இறுதியாக, “RSS தற்போது தெளிவான நிலைபாடு ஒன்றை எடுக்க வேண்டும். RSS அமைதியாக இருக்க முடியாது. RSS-ம் பிரதமர் மோடி கடவுளின் அவதாரம் என்று நம்புகிறதா?” என்று கேள்வி எழுப்பினார்.