3-வது முறையாக தொடர் ஆட்சியை பிடித்த பாஜக, கடந்த சில தினங்களுக்கு முன்பு, நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்திருந்தது. இந்த பட்ஜெட்டில் ஆந்திரா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, நடுத்தர மக்கள் பாதிப்பு அடைவார்கள் உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்கள், பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு எழுந்தது.
இந்நிலையில், பட்ஜெட் மீதான விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில், நிர்மலா சீதாராமன் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில் பேசிய அவர், “நடுத்தர வர்க்க மக்களுக்கு வரி சலுகை வழங்க வேண்டும் தான். ஆனால், எனக்கு சில வரம்புகளும் உள்ளன. வரியின் அளவை குறைத்து, வரி சலுகை வழங்க வேண்டும் என்று விரும்பினேன்.
அதனால் தான், நிலையான கழிவை 50 ஆயிரத்தில் இருந்து 75 ஆயிரமாக உயர்த்தினேன். வரியின் அளவை உயர்த்துவதன் மூலம், அதிக வருமானம் பெறும் வர்க்கத்தினரின் வரிப் பொறுப்புகளும் அதிகரிக்கும்.
புதிய வரி விதிப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்டதன் நோக்கமே, வரி விகிதத்தை குறைப்பதற்கு தான். மேலும், பழைய வரி விதிப்பு முறையை காட்டிலும், புதிய வரி விதிப்பு முறையில், வரியின் விகிதம் குறைவாக தான் உள்ளது” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “நானும் நடுத்தர வர்க்கத்தில் இருந்து வந்தவர் தான். நான் அவர்களது பிரச்சனையை புரிந்துக் கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
பின்னர், ஜி.எஸ்.டி குறித்து பேசிய நிர்மலா சீதாராமன், “ஜி.எஸ்.டி-யை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு, பல்வேறு மாநிலங்கள் தங்களது சொந்த வரியை முக்கியமான பொருட்களின் மீது விதித்திருந்தனர்.
இதன்விளைவாக, நாடு முழுவதும் விலைகள் மாறுபட்டு இருந்தன. ஆனால், நாடு முழுவதும் உள்ள அத்தியாவசிய பொருட்களுக்கான விலையை, ஜி.எஸ்.டி தான் வரைமுறைப்படுத்தியது.
நாடு முழுவதும், அத்தியாவசிய பொருட்களின் விலை ஒரே மாதிரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள தான் ஜி.எஸ்.டி கவுன்சில் உருவாக்கப்பட்டது” என்றும் அவர் கூறினார்.
இந்த முறை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், 10 சதவீததத்தில் இருந்து 12.5 சதவீதமாக, நீண்ட கால மூலதன ஆதாய வரி உயர்த்தப்பட்டது. இதுகுறித்து பேசிய நிர்மலா சீதாராமன், “ரூ.1.25 லட்சம் வரையில் வருமானம் பெறும் குறுகிய முதலீட்டாளர்களுக்கு, வரியே கிடையாது. ஆனால், பல்வேறு குறுகிய முதலீட்டாளர்கள் அதிக வருமானம் பெறுகிறார்கள்.
அவர்கள் குறைவான அளவு தான் வரி செலுத்துகிறார்கள். இதன் விளைவாக தான், நீண்ட கால மூலதான ஆதாய வரி, 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டது” என்று கூறினார்.