நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சீமான். இவர், சமீபத்தில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார். இது, தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால், காவல்நிலையங்களில் பலரும் புகார் அளித்திருந்தனர்.
இதன்பேரில், இவருக்கு தற்போது காவல்துறையினர் தரப்பில், விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தில், சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிரபாகரன் உட்பட, உலகில் உள்ள எந்த தலைவர்கள் பெரியாரை ஏற்றுக் கொண்டாலும், நான் பெரியாரை ஏற்க மாட்டேன் என்றும், தன்னுடைய தம்பிகளும் பெரியாரை ஏற்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.
மேலும், பெரியாரை ஏற்றுக் கொள்ளும் தம்பிகள், என்னை விட்டு விலகிக் கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய சீமான், பெரியார் ஆதரவு நிலைப்பாட்டில் தான் நான் இருந்தேன். ஆனால், தற்போது அது கொண்டாடப்பட வேண்டிய கொள்கை இல்லை என்பது தெரிந்ததும் எதிர்க்கிறேன் என்றும் கூறினார். மேலும், எனக்கு சொந்தமான ஆயிரம் பெரியார்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள். எங்கிருந்தோ வந்த பெரியார் எனக்கு தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.