தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள அறிஞர் அண்ணா – கருணாநிதி சிலை முன்பு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் “சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு” நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது : அண்ணாமலைக்கு அரசியலே தெரியவில்லை. தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, அண்ணா மறைந்த நாள் முதல் அண்ணா என்றுதான் அவரை எல்லோரும் அழைக்கிறார்கள்.
அவரைவிட வயதில் மூத்தவர்கள் கூட அண்ணா என்றுதான் அழைக்கிறார்கள். ஆனால், நேற்று பிறந்த அண்ணாமலை, நேற்று அரசியலுக்கு வந்த இந்த அண்ணாமலை அண்ணாதுரை என்று ஆணவமாக அழைக்கிறார்.
அண்ணா மட்டும் பிறக்காமல் இருந்திருந்தால் அண்ணாமலை ஆடுதான் மேய்த்துக்கொண்டு இருக்க வேண்டும். ஆடு மேய்க்கிற அண்ணாமலை ஐபிஎஸ் ஆனது அண்ணா போட்ட பிச்சை. பெரியார் போட்ட பிச்சை. 1949 லேயே திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கி தனிப் பெரும் தலைவராக தமிழ்நாட்டில் பவனி வந்தவர். அப்படிப்பட்ட தலைவரை பார்த்து இப்படி கேவலமாக பேசிக்கொண்டு இருக்கிறார்.
அவர் இப்படி பேசுவதை நிறுத்துக்கொள்ளாவிட்டால், தமிழ்நாடு மக்கள் எழுந்தால், அவர் எங்கு போலீஸ் அதிகாரியாக பணிபுரிந்தாரோ அந்த கர்நாடகாவுக்கு மிக விரைவிலேயே ஓடிப்போகிற நிலைமை வரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார்.